வழக்கறிஞர்கள் இனி அங்கி அணிய வேண்டாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வழக்கறிஞர்கள் இனி அங்கி அணிய வேண்டாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
X

பைல் படம்.

வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர்களுக்கான அங்கியை அணிய வேண்டும் என கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி , சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017- ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய கம்பெனி சட்ட வாரிய விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது எனவும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவித்தனர். மேலும், இது போன்ற விதிகளை வகுக்க உயர் நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, 2017-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

முன்னதாக தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை பொறுத்தவரை இந்திய பார் கவுன்சில் விதிகள் பொருந்தும் என தேசிய கம்பெனி சட்ட வாரியம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!