தேன்கனிகோட்டையில் யானை துப்பாக்கியால் சுட்டு கொலை

தேன்கனிகோட்டையில் யானை துப்பாக்கியால் சுட்டு கொலை
X
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்து சென்னமாலம் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தளி அருகே காட்டு யானை தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானார் மேலும் விளை பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் சென்னமாலம் கிராமத்தையொட்டி உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் விவசாய தோட்டத்தில் ஒரு காட்டு ஆண் யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ராஜமாரியப்பன் ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருந்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதிலிருந்த 2 தந்தங்களும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும், அந்த யானையை நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்ம நபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் ஜவளகிரி வனத்துறையினரும், காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் தலைமையில் 3வனசரக அலுவலர்கள் கொண்ட குழுவினரை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!