கிருஷ்ணகிரி முல்லைநகர் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்

கிருஷ்ணகிரி முல்லைநகர் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்
X

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்

கிருஷ்ணகிரி முல்லைநகர் அக்ரஹாரம் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஆவின் மேம்பாலம் எதிரில் தேவசமுத்திரம் மற்றும் அகசிபள்ளி ஊராட்சிகளுக்குட்பட்ட அக்ரஹாரம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தனியார் பள்ளி, அரசு பள்ளிகளும் உள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகரையொட்டியுள்ள இந்த பகுதி வேகமாக வளர்ச்சியடையும் பகுதியாக இருந்தாலும் முல்லை நகர் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியாக உள்ளது.

குறிப்பாக மழை பெய்தாலே அந்த பகுதியில் செல்ல வழியில்லாமல் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மழை நின்றபின் பலநாட்கள் வெயில் அடித்தாலும் மழைநீர் வற்றாமல் குடியிருப்பு பகுதிகளை முழுவதும் சுற்றி குளம்போல் காணப்படுகிறது. மழைநீர் செல்ல வழி இல்லாததும், கழிவுநீர் கால்வாய் வசதி அந்த பகுதியில் இல்லாததுமே மழைநீர் தேங்க காரணம் என கூறப்படுகிறது.

இவ்வாறு மழைநீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதால் வீட்டில் இருந்து பல நாட்கள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் பல இடங்களில் உள்ள காலிமனைகளில் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் விஷ ஜந்துக்களும் அதிகமாக உள்ளன. இதைத் தவிர கொசு தொல்லையும் அதிகமாக உள்ளன. ஆகவே தேசிய நெடுஞ்சாலையையொட்டி மழைநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்திட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏற்கனவே உள்ள கால்வாய் பாதையை அகலப்படுத்தினால் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!