கிருஷ்ணகிரியில் வன உயிரின வேட்டையை தடுக்க ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் வன உயிரின வேட்டையை தடுக்க ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வனத்துறை சார்பாக வன பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் இதர வகையான குண்டுகள் வைத்து வன உயிரினங்களை வேட்டையாடுவதை தடுக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்புகளில், நாட்டு வெடிகுண்டுகள் (அவிட்டுக்காய்), கன்னிவெடி மற்றும் இதர வகையான குண்டுகள் வைத்து வன உயிரினங்களை வேட்டையாடுவதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, 05.11.2023 அன்று 32 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை மேலும் தீவிரமாக கண்காணிக்க காவல்துறையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், நாட்டு வெடி குண்டுகள், வலைகள் மற்றும் பொறிகள் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களை விற்கவோ, வழங்கவோ கூடாது என குவாரி உரிமையாளர் சங்கத் தலைவர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு அனுமதி இல்லாத வெடிபொருட்களை கொண்ட நபர்கள் யாரும் வனப்பகுதிகளில் இருப்பின் / தென்படின் அவர்களின் விவரங்களை வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கலாம். மேலும் வனப்பகுதிகளில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வு கூட்டத்தில், ஒசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொ) புஷ்பா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்) சேகர், கனிமவளத்துறை துணை இயக்குநர் ஜெயபால், விவசாய சங்க தலைவர் ராமகவுண்டர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu