இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம்
பயனாளிகளுக்கு வைப்புத்தொகைக்கான ஆணைகளை வழங்கும் ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமுக நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று (08.08.2023) துவக்கி வைத்து, 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 இலட்சம் மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 11.07.2023 அன்று நடத்தப்பட்டது. இம்முகாமில் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு வைப்புத் தொகை இரசீது மற்றும் முதிர்வுத் தொகை காசோலைகள் வழங்கப்பட்டு மனுக்களும் பெறப்பட்டது. 11.07.2023 அன்று பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 இலட்சம் மதிப்பிலான வைப்புத்தொகைக்கான ஆணைகள் இன்று (08.08.2023) வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25000/- வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தையின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும்.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டு புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும் மற்றும் இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu