ஆன்லைன் மூலம் 3 பேரிடம் ரூ.22.50 லட்சம் பணம் மோசடி

ஆன்லைன் மூலம் 3 பேரிடம் ரூ.22.50 லட்சம் பணம் மோசடி
X

ஆன்லைன் மோசடி - காட்சி படம் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஓம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராம்கி (வயது 30). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் நடந்து விவகாரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய ஆன்லைனில் மணமகள் தேடி பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த நெதர்லாந்தில் நர்சாக பணிபுரியும் ஒரு பெண் இவரிடம் தொடர்பு கொண்டு ரூ. 1000 மில்லியன் யூரோ பணம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். அதற்காக நாணய மாற்று கட்டணங்களை செலுத்த ரூ.6 லட்சம் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப சொன்னார்.

அதன்படி இதனை நம்பி சுந்தர் ராம்கி ரூ.6 லட்சத்தை பணத்தை அவருடய வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ராம்கி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதேபோல் ஓசூர் அருகே உள்ள பாகலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவிபூர்ணிமா. இவரது செல்போனில் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கூகுள் வரைபட பணி மூலம் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.11,20,156 வங்கி கணக்கின் மூலம் அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூர்ணிமா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதிநேர வேலையில் நல்ல வருமானம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.5,37,000 பணத்தை அனுப்பினார். பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!