நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு நிவாரண நிதி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு காசோலையை வழங்கும் ஆட்சியர் சரயு.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே இன்று (11.09.2023) அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவச்சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, காயமடைந்த 9 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் 08.09.2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11.9.2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இதில் பயணித்த பயணிகள் நிறுத்தப்பட்ட வாகனத்தின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 9 நபர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளது.
இந்த துயரச் செய்தியினை அறிந்த தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவும், மேலும், இவ்விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேலூர் மாவட்டம், ஓணாங்குட்டையைச் சேர்ந்த சியாமளா, சத்யா, பேர்ணாம்பட்டு சேர்ந்த வைஷ்ணவி, கமல்கணேஷ், தனஞ்செயன், சதீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த அருணாசலம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரவி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவதுரி ஆகிய 9 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள் இன்று (11.09.2023) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகர், வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அப்துல்முனீர், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (நீதியியல்) வெங்கடேசன், வட்டாட்சியர் விஜயகுமார், துணை வட்டாட்சியர் மகேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu