கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருக்கலைப்பு செய்த பெண் தலைமறைவு, தேடும் காவல்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி சுகாதார பணிகள் துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர், போலீசார், வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது நரிமேடு பகுதியில் காயத்ரி என்பவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக கர்ப்பமான நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வேடி என்ற புரோக்கர் மூலம் ஸ்கேன் டெக்னீசியன் சுகுமாரன் என்பவர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை பெண் என கண்டுபிடித்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் காவேரிப்பட்டணம் கொசமேடு எம்.எஸ். நகரில் உள்ள உமாராணி என்பவரிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் வசிக்கும் உமாராணி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றினர். மேலும் அவரது வீட்டுக்கு அருகில் இருந்த மூவரை அதிகாரிகள் விசாரித்தபோது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணியும் கருக்கலைப்பு செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை அறிந்து தலைமறைவாகி விட்ட உமாராணியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுக்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் திருப்பத்தூர் மாவட்டம் பேராணம்பட்டு அருகே விசமங்கலம் அருகில் ஒரு வீட்டில் கர்ப்பிணிகள் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஸ்கேன் செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களுடன் மூன்று இடைத்தரகர்களும் இருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.29,500 ரொக்கத்தைபறிமுதல் செய்தனர். மேலும் ஆன்லைன் மூலமும் ரூ.18,500 பணத்தை புரோக்கர் வேடிக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து இடைத்தரகர்கள், கர்ப்பிணிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வேடி மற்றும் ஸ்கேன் செய்யும் சுகுமாரன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu