கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 28ம் தேதி முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முகத்தன்மையை இளந்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள "முத்தமிழ்த்தேர்” - அலங்கார ஊர்தி 28.11.2023 அன்று (செவ்வாய்க்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில் "முத்தமிழ்த்தேர்” - அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அலங்கார ஊர்தியின் தொடக்க விழா கடந்த 04.11.2023 சனிக்கிழமை கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப் பூங்காவில் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் "முத்தமிழ்த்தேர்” பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு, வருகின்ற 28.11.2023 அன்று (செவ்வாய் கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் “முத்தமிழ்தேர்” அலங்கார ஊர்திக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் 28.11.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும், "முத்தமிழ்தேர்” ஒசூர் பேருந்து நிலையம், பர்கூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
எனவே, இதனைப் பொதுமக்கள், இளந்தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதிகளவில் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu