பயனாளிகளுக்கு வங்கி கடன் தொகையை வழங்கிய அமைச்சர் சக்ரபாணி

பயனாளிகளுக்கு வங்கி கடன் தொகையை வழங்கிய  அமைச்சர் சக்ரபாணி
X
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் விழா நடந்தது

கெலமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (தளி), பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 1,188 பேருக்கு ரூ.21 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும் மேல்கரடிகுறி, கொத்த கிருஷ்ணப்பள்ளி, துடுக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் 3 ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். அனைத்து ரேஷன் கடைகளிலும் பணமில்லாத பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் 376 அரவை நிலையம் மட்டுமே செயல்பட்டு வந்தது. தமிழக முதலஅமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 700 அரவை ஆலைகளாக உயர்த்தியும், 21 மார்டன் ரைஸ் மில் ஆகியவற்றின் மூலம் கருப்பு பழுப்பு இல்லாத அரிசியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

29 மாதங்களில் 16 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைகள் தொலைத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெற இணையதளம் மூலம் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி, பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு துறை சார்பாக பொதுமக்கள் பயனடையும் வகையில் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளிக் கடன், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 57 இதர கூட்டுறவு நிறுவனங்களும், 22 தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளும் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக, 2022 2023 ஆம் நிதியாண்டிற்கு 33,011 நபர்களுக்கு ரூ.2 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலும், 2023 -24 ஆம் நிதியாண்டிற்கு 15,340 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்

நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) குமரன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாச ரெட்டி, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் குமார், வட்டாட்சியர் பரிமேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!