கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு; யானைகள் தாக்கி விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்த யானைகளால்  பரபரப்பு;  யானைகள் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

Krishnagiri News, Krishnagiri News Today-கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்த யானைகள் தாக்கி, விவசாயி உயிரிழந்தார். (கோப்பு படம்) 

Krishnagiri News, Krishnagiri News Today-கிருஷ்ணகிரி நகருக்குள் யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த யானைகள் தாக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

Krishnagiri News, Krishnagiri News Today - தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து 2 ஆண் யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு வந்தன. இந்த யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் அதிகாலையில் சோக்காடி காப்புக்காட்டில் இருந்த யானைகள் அங்கிருந்து கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவர் பூங்கா வழியாக சென்று கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வனச்சரகர்கள் கிருஷ்ணகிரி ரவி, ராயக்கோட்டை பார்த்தசாரதி மற்றும் 50-க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் அங்கு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அங்கு சென்றதுடன், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2 யானைகளும் தேவசமுத்திரம் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் புதிய வீட்டுவசதி வாரிய பகுதிக்கு வந்தன. பின்னர் அங்கிருந்து ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக சேலம் பைபாஸ் பகுதிக்கு வந்தன. அங்கு சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பிகளை கால்களால் மிதித்து விட்டு பின்னர் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக பெங்களூரு சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி பக்கமாக சென்றன. அதன் அருகில் உள்ள தெரு வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட், கொத்தபேட்டா, சிப்பாயூர் வழியாக சாமந்தமலைக்கு யானைகள் சென்றன.

இந்நிலையில், சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் (வயது 55) தனது தோட்டத்துக்கு காவலுக்காக அந்த வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் யானைகளை கண்டதும் ஓட முயன்றார். ஆனால், ஒரு யானை துதிக்கையால் திடீரென பெருமாளை தூக்கிப்போட்டு தந்தத்தால் குத்தியது. மற்றொரு யானையும் சேர்ந்து அவரை காலால் எட்டி உதைத்தது. யானைகள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து அலறினார். பின்னர் யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று காயமடைந்தவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது சாமந்தமலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் யானைகள் சுற்றிவருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் யானைகள் தாக்கி விவசாயி பலியான சம்பவமும், யானைகள் நகரையொட்டி உள்ள தோப்புக்குள் சுற்றிவருவதும் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

நிதியுதவி தந்த வனத்துறை

யானை தாக்கி பலியான விவசாயி பெருமாளின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதிஉதவி நேற்று வழங்கப்பட்டது. அரசின் மூலம் நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி சாமந்தமலை பகுதியில் யானைகள் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

2 மாதத்தில் 4 பேர் பலி

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்துக்குள் வந்த இந்த யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21-ம் தேதி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிகொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன. தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டியை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகி உள்ளார். கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த 2 யானைகளும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரை தாக்கி கொன்றுள்ளன.

கிருஷ்ணகிரி நகருக்குள் முதல் முறையாக வந்த யானைகள் கிருஷ்ணகிரி நகரையொட்டி சோக்காடி, ராயக்கோட்டை சாலை பகுதிகளில் யானைகள் இதற்கு முன்பு வந்துள்ளன. ஆனால் கிருஷ்ணகிரி நகருக்குள் இதுவரையில் யானைகள் வந்ததில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக கிருஷ்ணகிரியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள புதிய வீட்டுவசதி வாரியம், ராயக்கோட்டை சாலை, லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம், பெங்களூரு சாலை, புதிய பஸ் நிலையம், கொத்தபேட்டா, சிப்பாயூர், கிருஷ்ணகிரி ஆயுதப்படை குடியிருப்பு வழியாக சாமந்தமலைக்கு சென்றன. இதற்கிடையே அதிகாலை நேரத்தில் யானைகள் வந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!