போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கம்
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் கொடியசைத்து துவக்கி வைத்து, கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார்.
இப்பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, லண்டன் பேட்டை வழியாக பழைய பேட்டை நகர பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. இப்பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மற்றும் காவேரிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், தன்னார்வலர்கள் சுமார் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளச் சாரயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் கண்பார்வை இழத்தல், பசியின்றி உடல் நலம் குறையும், நிரந்தர உடல் நலம் குறையும், நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்தும், நினைவாற்றல் பாதிக்கப்படும், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழக்க செய்யும், குடும்ப பாசம் விடுபட்டு, சமூகத்தில் மதிப்பு குறையும், தன்னிலை மறந்து சீர்கேடுகள் நிகழ்த்துவர், தனிமை படுத்தப்படும். மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தீமைகளிலிருந்து விடுபட போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று சூளுரைத்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
அதேபோல், போதைப்பொருட்களை கடத்தவோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ, உபயோகப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பற்றிய புகார்களை 10581 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இப்பேரணியில் உதவி ஆணையர் (ஆயம்) குமரன், துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமுல் பிரிவு) எம்.சிவலிங்கம், கோட்ட ஆய அலுவலர்கள் தண்டபாணி, ஜெயபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu