ஓசூர் அருகே 7 பட்டாசு கடைகளுக்கு சீல்
வெடி விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
https://www.maalaimalar.com/news/district/7-firecracker-shops-sealed-at-karnataka-border-near-hosur-673440
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அதிதிப்பள்ளி வளைவு அருகே நவீன் என்பவர் பட்டாசு கடையில், கடந்த, 7ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், நேற்று ஒரு இளைஞரும், இன்று காலை ஒரு இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், 2பிக்கப் வேன்கள், 1சரக்கு லாரி என 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
மேலும், பட்டாசு கடை வெடி விபத்து வழக்கினை, குற்ற புலனாய்வுத்துறைக்கு மாற்றியுள்ளதாக அறிவித்தார். இதனைக் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்து அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர்.
வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டிட சுவர்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. பிரவீன் மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) சிஐடி பிரிவு டிஜிபி எம்,ஏ, சலீம், மற்றும் ஐ.ஜி.பி பிரவீன் மதுக்கர் பவார், ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் கண்காணிப்பாளர் மல்லி கார்ஜூன பால்தண்டி உதவி காவல் கண்காணிப்பாளர் புருஷோத்தம் மற்றும் காவல்துறைஅதிகாரிகள், கர்நாடகா லோகாயுக்தா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டிருந்த 7 பட்டாசு கடைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், ஆனேக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu