கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
X

தேவசமுத்திரம் ஏரியில் உற்சாக குளியல்போட்ட யானைகள்.

Krishnagiri News, Krishnagiri News Today - கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டுள்ள இரு காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Krishnagiri News, Krishnagiri News Today - தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம் பஞ்சப்பள்ளி வனப்பகுதியிலிருந்து இரு காட்டு யானைகள் வெளியேறி, கடந்த 25ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதிக்கு வந்தன. இதனையடுத்து அந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்தன. யானைகளை வனத்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி அணை அருகே போலுகுட்டை பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இரு யானைகளும் நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் ஏரியில் உற்சாக குளியல்போட்டன. ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அசாம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மின்வாரியத்தினர் மின்சாரத்தை துண்டித்தனர்.

இந்த ஏரியில் யானைகள் குளித்து மகிழ்ந்ததை கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். நெடுங்சாலையின் ஓரம் வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்த்தனர். இதனால் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் டவுன், தாலுகா போலீசார் அப்பகுதியில் சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் உதவி வனபாதுகாப்பு அலுவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வனச்சரகர்கள் ரவி (கிருஷ்ணகிரி), பார்த்தசாரதி (ராயக்கோட்டை), வனவர்கள் சரவணன், தேவ்ஆனந்த், அண்ணாதுரை, வெங்கடாசலம் உள்ளிட்ட வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் நெக்குந்தி வழியாக சோக்காடி வனப்பகுதி அல்லது கூசுமலை வழியாக மேலுமலை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நெக்குந்தி, அக்ரஹாரம், அவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் யாரும் வெளியே வர வேண்டாம். மாந்தோட்டத்திற்கு காவலுக்கு செல்ல வேண்டாம். அதிகாலை 7 மணி வரை மல்லிகை பூக்கள் பறிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!