கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை. திமுக கவுன்சிலர் கைது

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை. திமுக கவுன்சிலர் கைது
போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பிரபு வயது 28. இவரது அண்ணன் பிரபாகரன் வயது 33 இருவரும் ராணுவ வீரர்களாக உள்ளனர்

கடந்த பிப்ரவரி 8ம் தேதி போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபுவின் மனைவி பிரியா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற நாஹோகனஹள்ளி பேரூராட்சி முதல் வார்டு திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று ஆத்திரத்துடன் கேட்டிருக்கிறார்.

கவுன்சிலர் சின்னசாமி சத்தம் போட்டதை பார்த்து அருகே வந்த பிரபு விசாரிக்க, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோபத்தில் சென்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை 10க்கும் மேற்பட்டோருடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு ஆகியோருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட, வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளது.

அப்போது சின்னசாமி மற்றும் அவருடன் ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து ராணுவ வீரர்கள் பிரபு, பிரபாகரன், பிரியா உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் மோசமாக படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

தங்களை திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக பிரபுவின் மனைவி பிரியா நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கவுன்சிலரின் மகன்களான ராஜபாண்டி, குருசூரியமூர்த்தி, குணநிதி, அவர்களின் உறவினர்களான மணிகண்டன், மாதையன், வேடியப்பன், உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பிரபு இறக்கவே, நாகரசம்பட்டி காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து, தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story