மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு

மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு
X

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் பிரதிநிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது பஞ்சாயத்துகளில் ஊட்டச்சத்து குறித்து அறிக்கைகளை உரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடுமையான மற்றும் மிதமான வளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தில் தரப்படும் இணை உணவுகளை சரியாக குழந்தைகள் உண்ணுமாறு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், இணை உணவின் அவசியத்தை பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

முன் பருவக்கல்வி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கான கூட்டங்கள் நடத்தி அதில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்க்க வேண்டும். கிராம சுகாதார - ஊட்டச்சத்து தினம் நடத்தப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்பட செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தின் கட்டமைப்பு வசதிகளான, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இவற்றை சீரமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சத்தான காய்கறிகள் சுலபமாக கிடைக்கும் விதத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்து அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

தாய்மார்களை குழுக்களாக அமைத்து, அவர்களின் பொறுப்புகளை விவரித்து கூற வேண்டும். போஷன் பஞ்சாயத்து என்கிற இலக்கை உருவாக்கி அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களின் ஆரோக்கியம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்கள், வீட்டில் யோகா, குடும்பத்தினருடன் யோகா என்று ஆயுஸ் விழிப்புணர்வுகளின் மூலம் ஆரோக்கியமாக இருக்க பயனாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.

சமுதாயத்தில் உள்ள குழந்தைகளின் உடல், மனம் இவைகளின் மேம்பாட்டிற்க பஞ்சாயத்து தலைவர்களின் பங்கு மிகவும் அவசியமாகும். இப்பணியை மிகுந்த அக்கறையுடனும், அரவணைப்போடும் அவர்கள் வழி நடத்திச் சென்று தங்களது பஞ்சாயத்துகளை ஊட்டச்சத்து குறைபாடில்லா பஞ்சாயத்தாக உருவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலர் ப.சரளா, புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திசரஸ்வதி, நகரமன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!