அவதானப்பட்டி படகு இல்லத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
அவதானப்பட்டி படகு இல்லத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சரயு.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் சார்பில் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இன்று (07.11.2023) நேரில் பார்வையிட்டார்.
மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பு குழுக்கள் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் ஒத்திகை பயிற்சியை நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஏற்படும் மின்வெட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றுதல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மீட்பு குழு மூலம் துரிதாமாக மேற்கொள்ளப்படும். ஜேசிபி இயந்திரங்கள், மரக்கிளைகளை அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் படகுகள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவதானப்பட்டி படகு இல்லத்தில் 20 -க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள், நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பது மீட்கப்பட்டு, முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், மழைக்காலங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்களை பாதுகாப்பு கவச உடை அணிவித்து மீட்கப்படுவது, சாலை விபத்து நடைபெறும்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை நவீன கருவிகளை கொண்டு இரும்பை உடைத்து மீட்பு பணிகள் மேற்கொள்வது, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வரும்போது அவற்றை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பது, பேரிடர் காலங்களில் சுய பாதுகாப்பு மேற்கொள்வது, வீடுகளில் தாழிட்டு கொண்டவர்களை மீட்பது போன்ற பணிகள் குறித்து இன்று பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் முன்பு செயல் விளக்கம் அளித்தனர்.
பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கால்நடைகளை நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.மகாலிங்க மூர்த்தி, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.கருணாகரன், நிலைய அலுவலர்கள் எ.சக்திவேல், ப.பழனி, வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu