கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஆட்சியர் கள ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஆட்சியர் கள ஆய்வு
X

சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஒசஹள்ளி, அஞ்சாலம், சீனிவாசபுரம் கிராமங்களில் தெருவிளக்குகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சரயு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் ஆய்வின்போது, காலை உணவு திட்டபணிகள், குடிநீர் மற்றும் சுகாதார துாய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சென்னப்பள்ளி, இம்மிடிநாயக்கனபள்ளி, சொரக்காயலபள்ளி, பஸ்தலப்பள்ளி, மேலுமலை ஊராட்சிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார துாய்மை பணிகள், பள்ளிகளில் காலை உணவு திட்டபணிகள், குடிநீர் வினியோகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இரண்டாவது நாளாக நேறறு கள ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராமபுறங்களில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களுக்கு சென்றடையும் நோக்கில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள், குடிநீர் விநியோகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள "உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சூளகிரி வட்டத்தை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல், மறுநாள் காலை 09.00 மணி வரை சூளகிரி உள் வட்டத்திற்குட்பட்ட 40 கிராமங்கள், உத்தனப்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்கள், பேரிகை உள்வட்டத்திற்குட்பட்ட 34 கிராமங்கள் என மொத்தம் 87 கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று (31.01.2024) சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 42 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பொதுமக்களிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஒசஹள்ளி, அஞ்சாலம், சீனிவாசபுரம் கிராமங்களில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் திட்டபணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் நியாய விலைக்கடையில் பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா, தினசரி குடிநீர் விநியோகம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை பார்வையிட்டு இரவு உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் பாடத்திட்டங்கள், பொது தேர்வு குறித்து கலந்துரையாடினார்.

இன்று (01.02.2024) காலை 6 மணிக்கு சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில் பொதுசுகாதார தூய்மை திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் கொண்டு கிராம துாய்மை பணிகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பூங்கா பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் பணிகள் மற்றும் குடிநீரில் குளோரின் அளவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, பெரிய பேடபள்ளி கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகள், லேக்டோமீட்டர் கொண்டு பாலின் தரம், பால் பணம் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு கிராம பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் சொரக்காயனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, மேலுமலை ஊராட்சிகளின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரிசி உப்புமா, சாம்பார், சமையல் பணிகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு விநியோக

பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரித்து வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிறைவாக, மேலுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளின் வருகை பதிவேடு, கர்ப்பிணி தாய்மார்களின் தொடர் கண்காணிப்பு, மருந்து இருப்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க், மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பெரியசாமி, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், ஒசூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த், மாவட்ட ஊராட்சி செயலர் சாந்தா, வட்டாட்சியர் திரு.சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!