கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கூட்டணியில் லடாய்
கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட செயலர் மாதேஷ், அவரது ஆதரவாளரான ஒன்றிய செயலர் ரமேஷ் பங்கேற்கவில்லை.
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தியாகு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், நகர செயலர் சரவணன் மற்றும் ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளுக்கு தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை முறையாக பிரித்து கொடுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கிருஷ்ணகிரி நகர செயலர் கூறுகையில், மாவட்ட செயலர் மாதேஷ், சிவக்குமாருடன் சென்று, தி.மு.க., மாவட்ட செயலர் மதியழகன் மூலம், காங்கிரஸ் வேட்பாளரிடம், 15 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக பெற்றுள்ளார்.
அதை ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு முறையாக பிரித்து கொடுக்காமல், சிவக்குமார் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும், 2,000 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்றால், நிர்வாகிகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற பயத்தில், மாதேசும் அவரது ஆதரவாளரான ரமேசும் பங்கேற்கவில்லை.
தேர்தல் செலவுகளுக்கு காசில்லாமல் தொண்டர்களிடம் வேலை எவ்வாறு வாங்க முடியும். கூட்டணி கட்சி வேட்பாளரை, எவ்வாறு வெற்றி பெற வைக்க முடியும்.
கூட்டணி கட்சி வேட்பாளர், நிர்வாகிகளை முறையாக சந்திக்காததால், அவரை, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிகளிலுள்ள, எங்கள் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு உள்ளே நுழையவிட மாட்டோம். இப்பிரச்னை குறித்து, கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார்
இது குறித்து மாதேஷ் கூறுகையில், வந்த நிதியை கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுத்து தேர்தல் பணி ஆற்ற சொல்லியுள்ளோம்.
வேப்பனஹள்ளி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இன்னும் எந்த நிதியும் கொடுக்கவில்லை. தலைமை அறிவித்துள்ள ஆட்களை வைத்தே, தேர்தல் பணி மேற்கொள்கிறோம்.
சிலர் எங்களுடன் இணக்கமாக இல்லை. அது எங்கள் தவறு இல்லை. கூட்டணி கொள்கைக்கு துரோகம் செய்வோர் மீது, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். வேறொன்றும் சொல்வதற்கில்லை என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu