கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இன்று (05.01.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டு, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 800 மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார்செய்வது குறித்தும், தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும், உயர்கல்வியில் வேலைவாய்ப்புகள் குறித்தும், நம் வாழ்க்கை நம் கையில் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது.
மேலும், மாணவ, மாணவிகள் தனக்கு விருப்பமான துறையினை தேர்ந்தெடுத்து அத்துறையில் சிறந்து விளங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். மாணவிகள் தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதில், உள்ளூர் செய்திகள், தேசிய செய்திகள் மற்றும் உலக செய்திகளை வாசித்து குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கமானது, போட்டித்தேர்வு எழுதும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவிகள் தங்களது கையெழுத்தினை மேம்படுத்த தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்.
மேலும், போட்டித்தேர்விற்கு தயாராகும்போது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விடையளிக்க வேண்டுமெனில், தினமும் நாம் அதற்கான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் 9 மற்றும் 10 -ஆம் வகுப்பு படிக்கும் போதே எதிர்கால உயர்கல்விக்கு தங்களை தயார்படுத்தி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 106 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 -ம் வகுப்பு படிக்கும் 12,561 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகள் என 20 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனவே, மாணவ, மாணவிகள் இதுபோன்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள், வரைப்படங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்(பொ) உமா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா உதவி பேராசிரியர், துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu