5,000 ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கல்

5,000 ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கல்
X

கிருஷ்ணகிரியில் 5,000 ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் 5,000 ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை மூலம் 5000 ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு விவசாய பெருமக்கள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 29 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தோட்டக்கலைத்துறை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும்போது:

ஆடிப்பட்டம் தேடிவிதை!!!- விளை நிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டு வரும் மாதம் ஆடிமாதம். இது புதிய விளைச்சலுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும். புராட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்து விடும். மேலும் இம்மாதத்தில் மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான தட்ப வெப்ப சூழ்நிலை நிலவும். ஆடி 18-ஆம் தேதியும் அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். மேலும் மானாவாரி பயிர்களுக்கும் ஆடிப்பட்டம் மிகவும் சிறந்தபட்டமாகும்.

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

1. ஆடி மாதத்தில் விதைத்து விவசாயம் செய்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும்,பிராண வாயுவும், நல்லமழையும் கிடைத்து விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். கடுமையான கோடைக் காலங்களைச் சந்தித்த மண் இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.

2. மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரீயாக்கள் உருவாக தொடங்கும். இதனால் மண் செழிப்பதோடு விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை ஊக்குவிக்கிறது.

3. மண் வளத்தை பாதுகாக்கும் சிறுபூச்சிகள் முதல் பயிர்களை காக்கும் சூரியன் வரை ஆற்றலாக செயல்படுவதால் இம்மாதம் விளைச்சலுக்கு ஏற்றமாதமாக விளங்குகிறது.

4. பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

ஆடியில் நடவுக்கு ஏற்ற தோட்டக்கலை பயிர்கள்:

அவரை, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகற்க்காய், சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, பீர்க்கங்காய்,கீரை, புடலங்காய், சாம்பல் பூசணி, முருங்கை போன்ற காய்கள் ஆடியில் நடவு செய்வதற்கு ஏற்ற சூழல் ஆகும். அதேப்போல நகர்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மாடி தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தோட்டக்கலைத் துறை மூலம் 5000 விதைத் தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதில் வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, கீரை, முருங்கை, அவரை, புடலை, சாம்பல் பூசணிமற்றும் மஞ்சள் பூசணி போன்றகாய்கறி விதைத் தொகுப்புகள் உள்ளடக்கியவை. இதனை விவசாய பெருமக்கள் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க விரும்பும் பயனாளிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொ) (வேளாண்மை) சீனிவாசன், உதவி வேளாண் அலுவலர்கள் சீனிவாசன், கார்த்திக், வட்டாட்சியர் சம்பத் மற்றும் தோட்டகலைத்துறை அலுவலர்கள் வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாய பெருமக்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!