கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை
X

கொடநாடு எஸ்டேட் (பைல் படம்)

கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள காவல்துறையினர் அண்மையில் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான ஐயப்பனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் டிவு செய்தனர். இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.

அதன்படி இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் கோடநாடு பங்களா குறித்து, பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த பதில்களை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!