கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பொங்கல் பண்டிகைக்குள் திறப்பு - அமைச்சர் உறுதி
சென்னை, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் ( மாதிரி படம்)
Kilambakkam New Bus Stand - சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் என 2 பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் வரும் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதன் பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பஸ்களை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு தற்போது ரோடு வழியாக மட்டுமே செல்ல முடியும். மின்சார ரயில் கிளாம்பாக்கத்தில் இல்லை. பண்டிகை காலங்களில் அனைவரும் ரோடு வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்ப உள்ளது. எனவே, இதைத் தடுக்க கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கோரி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகள் ரோடு வழியாக நடந்து செல்வதை தவிர்க்க, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதிக்கு ஒரு மேம்பால நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பால நடைபாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படவுள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் 60 நாட்களில் முடிவடைய உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள், பஸ் ஸ்டாண்டை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் சென்னை புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது வரை 82 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் பொங்கல் பண்டிகைக்குள், இந்த பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள், 60 நாட்களுக்குள் முடிவடையும். 2,350 பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் வகையில், மிகப்பெரிய புறநகர் பஸ் ஸ்டாண்டாக இது அமைக்கப்பட்டு இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். இதேபோல் பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் இந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு, புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதே வேளையில், பஸ் ஸ்டாண்ட் எதிரில், ரயில்வே ஸ்டேஷன் அமைக்கவும், தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த இரண்டு திட்டங்களுமே, சிறந்த முறையில் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தமிழக மக்கள் பலவிதங்களில் பயனடைவர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu