ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் கொல்லப்பட்டது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் கொல்லப்பட்டது எப்படி?
X

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரௌடி திருவேங்கடம் 

திருவேங்கடம் அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காவல் துறையினரை தாக்க முயற்சிக்கவே தற்காப்புக்காக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்ள்

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு தலைவரான கே ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சனிக்கிழமை இரவு என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தொடர் குற்றவாளி திருவேங்கடம், சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.

திருவேங்கடம் கொலைக்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கைப் பல நாட்களாகப் பின்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத 6 நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். பைக்கில் வந்த சிலர் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் தாக்கியதில், சாலையில் படுகாயம் அடைந்தார். BSP தலைவர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் மாநிலத்தில் பலத்த அரசியல் புயலை கிளப்பியது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை குறிவைத்து எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக குற்றம் சாட்டின.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மனைவி மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த அவர், கொடூரமான கொலையில் ஈடுபட்ட அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமார் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, மாதவரம் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக குற்றவாளிகள் தெரிவித்ததை அடுத்து, அதனை பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை காவல் துறையினர் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, முள் புதர்கள் நிறைந்த அந்த பகுதியில் அழைத்துச் சென்றபோது திருவேங்கடம் காவல் துறையினரை தாக்கி விட்டு அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காவல் துறையினரை தாக்க முயற்சித்துள்ளார்

இதனால் தற்காப்புக்காக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் குற்றவாளி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story