இணைய சேவைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

இணைய சேவைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை
X

கரூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இணைய சேவைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் தொழில் நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி தான் இன்டர்நெட். முன்னொரு காலத்தில் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் உள்ளவரிடம் தொலைபேசியில் கூட நேரடியாக பேசமுடியாத நிலை இருந்தது. ஆனால் தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக தற்போது உலகின் எந்த ஒரு மூலையில் உள்ளவரிடமும் இணையம் மூலமாக வீடியோ காலில் பேசும் நிலை உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது பெரு நகரங்கள், மாநகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் மட்டுமே இணையதள வசதி முழுமையாக உள்ளது. கிராமங்களில் இன்னும் இணைய வசதி முழுமை பெறவில்லை. நமது நாட்டின் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி செய்து கொடுப்பதற்கான சேவையை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு பல இடங்களில் தடங்கல்களும் ஏற்படுகிறது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்டத்திலுள்ள 157 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. OFC எனப்படும் கண்ணாடி இழை வடம் (Optical Fiber Cable) 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும் 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 157 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார்நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கான Rack / UPS உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் (VPSC) அல்லது ஊராட்சி நிர்வாக கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical Fiber Cable) கொண்டு செல்லக் கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவனப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.

மேலும், விளைநிலங்களில் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

கண்ணாடி இழையில் எந்த விதமான உலோக பொருட்களும் இல்லை எனவே, இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம்.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router. Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமையாகும்.

மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும். கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கேபிள் கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!