ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்

ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்
X

ராணுவ வீரர்களுக்கு ராக்கி - கோப்புப்படம் 

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

7வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் ராமசுப்ரமணியன் கூறுகையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம்.

2017-ல் 15 ஆயிரம் ராக்கிகள், 2018-ல் 16 ஆயிரம் ராக்கிகள், 2019-ல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020, 2021-ல் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன). கடந்த 2022-ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன.

அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம்.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

என்ற திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business