பி.எம்.கிசான் உதவித்தொகை பெற ஆதார் எண் பதிவு கட்டாயம் : கரூர் வேளாண் உதவி இயக்குனர்
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், 13-வது தவணையாக, அதாவது 2022, டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து கரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்ததாவது: பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம்.
அதன்படி பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி. செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபியை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.
அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளவும் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu