ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர பிரசாரம்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடை தேர்தலில் போட்டியிடும் திமிக வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கரூரில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கண்ணையாவை ஆதரித்து, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் கண்ணையா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், தாந்தோணி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லாண்டிபட்டி, திருமலைநாதன்பட்டி, குமாரபாளையம், வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி இன்று காலையில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், வெள்ளியணை, தாதம்பாளையம் ஆகிய ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டுவந்து நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவும், 200 ஏக்கரில் சிப்காட், வேளாண் கல்லூரி, உள்ளிட்ட திட்டங்களை, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகள் வாழ்வாதார மேம்படவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வாக்கு சேகரிப்பின் போது கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu