கரூர் அருகே சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை
மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலை.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கரூர் மாவட்டத்தில் தீக்குளித்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகி வீரப்பன் சிலையை ஊர் மக்களே செய்துவைத்தும் அதை நிறுவ அரசு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருவதால் உடனே அனுமதி வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவை போற்றும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று மொழிப்போர் தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. 1965-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப்பாடமாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பலர் தற்கொலை செய்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதில் ஒருவர் கரூர் மாவட்டம் ப.உடையாபட்டியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் வீரப்பன். இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தெற்கு அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றியபோது, பள்ளி வளாகத்திலேயே 1965-ம் ஆண்டில் தீக்குளித்து மரணம் அடைந்தார்.
உடலில் தீப்பற்றி எரிந்தபோது கூட தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என முழக்கமிட்டு மாண்ட அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், முன்னாள், இந்நாள் மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து, கடந்த 2016ஆம் ஆண்டு மார்பளவு வெண்கலச் சிலையை உருவாக்கினர். சுமார் 6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சிலையை நிறுவ, பள்ளி அருகிலேயே பீடம் ஒன்றையும் அமைத்த நிலையில், சிலையை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
பலமுறை அனுமதி கேட்டும் கிடைக்காததால், குடோன் ஒன்றில் ஆசிரியர் வீரப்பனின் சிலை முடங்கி கிடப்பதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மொழிக்காக போராடியவர்களுக்கு உரிய மரியாதை தரும் வகையில், அவரது சிலையை பள்ளி அருகிலேயே அமைக்க அனுமதி தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu