கூடுதல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை - கரூர் எஸ்பி., எச்சரிக்கை

கூடுதல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை - கரூர் எஸ்பி., எச்சரிக்கை

கரூரில் கந்து வட்டி வசூலிப்பதை ஒழிக்கும் முகாமில் பேசுகிறார் எஸ்.பி. சுந்தரவடிவேல்

அரசு விதிமுறைகள்படி வட்டி வசூலிக்காவிடில் உரிமம் ரத்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கரூர் எஸ்பி., எச்சரித்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கந்துவட்டி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி தொழில் செய்யும் நபர்கள் மற்றும் அவர்களிடம் வட்டிக்கு பணம் பெற்ற நபர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி சுந்தரவடிவேல் பேசுகையில், வங்கிகளில் பல்வேறு வகைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான நடைமுறைகள் உள்ளதால், தனி நபர்களிடம் எளிதாக கடன் கிடைப்பதால் பலரும் பணம் வாங்கி சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே தேவையறிந்து நியாயமான வட்டி கேட்பவரிடம் மட்டுமே கடன் பெற வேண்டும். அதே போல வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வோரும் அரசு விதித்துள்ள விதிமுறைகள், வழிமுறைகள் படியே வட்டி வசூலிக்க வேண்டும்.

கூடுதல் வட்டி, கந்து வட்டி என விதிமுறைகளுக்கு புறம்பாக வட்டி வசூல் செய்வதாக புகார் வந்தால் வட்டி தொழில் செய்வதற்கான உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யும். அதேநேரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். கந்து வட்டி கேட்டு பொதுமக்களை மிரட்டும் நபர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் சட்டப்படி தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

தொடர்ந்து அதிக வட்டி கேட்டு மிரட்டும் நபர்களால் பாதிக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் முகாமில் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story