விவசாயிகளின் இல்லம் தேடி சென்று பாரம்பரிய விதைகளை வழங்கிய மாணவர்கள்

விவசாயிகளின் இல்லம் தேடி சென்று  பாரம்பரிய விதைகளை வழங்கிய மாணவர்கள்

ஆடி முதல் தேதியையோட்டி கரூரில் விவசாயிகளுக்கு விதை வழங்கும் கல்லூரி மாணவர்கள்

பாரம்பரிய விதைகளை நினைவு கூறும் வகையில் விவசாயிகளின் தோட்டம் மற்றும் இல்லம் தேடி சென்று கல்லூரி மாணவர்கள் விதை வழங்கினர்.

"ஆடிப் பட்டம் தேடி விதை" என்பது பழமொழி. உழவு தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் விதை விதித்து, நடவு நட்டு விவசாயம் மேற்கொள்வது வழக்கம். பருவம் தவறி பெய்யும் மழைகளால் காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இருப்பினும், பாரம்பரியத்தை கைவிடாத விவசாயிகள் பலர் ஆடிப் பட்டத்தை தேடி உழவுப் பணியை தொடங்கி வருகின்றனர்.

மேலும், இரசாயனம் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால், பாரம்பரிய விதைகள் அழிந்து பல இடங்களில் காட்சி பொருளாக மாறி விட்டது. இதை மாற்றும் வகையில் கரூரில் தனியார் கல்லூரி மாணவ குழுவினர் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் வகையில் பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல், கீரை வகைகள், பீர்க்கன்காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய பாரம்பரிய விதைகள் சேமித்து கரூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் தோட்டம் மற்றும் வீடுகள் தேடிச் சென்று வழங்கினர்.

இது மக்கள் மத்தியில் வரவேற்பையும், அழிந்துவரும் பாரம்பரிய விதை மற்றும் விவசாயத்தை காக்க ஆர்வத்துடன் களம் இறங்கியுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Tags

Next Story