உற்பத்தி அதிகரித்ததால், வெல்லம் விலையில் சரிவு
karur news,karur news today -வெல்லம் விலையில் சரிவு. (கோப்பு படம் - வெல்லம்)
karur news,karur news today -உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்ததால், வெல்லம் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெல்லம், பல்வேறு விதமான பயன்பாடுகளில் தேவையாக இருக்கிறது. அதிரசம், பாயாசம் உள்ளிட்ட இனிப்பு பலகாரங்கள் செய்யவும், மருத்துவ குணங்களுக்காகவும் அதிகளவில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
கரூர் நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, கரைப்பாளையம் நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி, அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்லங்களை நன்றாக உலர்த்தி 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். பின்னர், இதனை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,190-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,120-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,120-க்கும் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,090-க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக, தைப் பொங்கல் காலகட்டத்தில், வெல்லம் பயன்பாடு அதிகரிப்பதால், வழக்கத்தை விட சற்று விலை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, உற்பத்தி அதிகரித்ததால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu