கரூர் அருகே கபடி வீரர் உயிரிழப்பு.. முதல்வர் ரூ. 2 லட்சம் நிதியுதவி...
உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கம்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், கரிச்சிக்காரன்பட்டியைச் சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.
அவர்களை கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்க்கும் கபடி வீரர் மாணிக்கம் என்பவர் அழைத்து வந்துள்ளார். அப்போது மாணிக்கதுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சக வீரர்கள் அவரை காரில் அய்யர்மலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாணிக்கத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கத்தின் தந்தை தங்கவேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். அவரது தாய் மாரியம்மாளுடன் வசித்து வந்த மாணிக்கம் தற்போது உயிரிழந்ததால் அவரது குடும்பமும், கரிச்சிக்காரன்ப்பட்டி கிராமும் சோகத்தில் மூழ்கி உள்ளது.
முதல்வர் இரங்கல்-நிதியுதவி:
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:
குளித்தலை வட்டம், கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்த கபடி விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான மாணிக்கத்தின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu