திருமணம் என்ற பெயரில் மோசடி: தரகருடன் கைதான பலே லேடி

திருமணம் என்ற பெயரில் மோசடி: தரகருடன் கைதான பலே லேடி
X

பல ஆண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைதானார்

திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில் புதுவகை மோசடியாக திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.

கரூரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் திருமண வரன் பார்த்துக் கொண்டு இருந்தார். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நல்ல திருமண வரன் இருந்தால் என சொல்லி பார்த்துக் கொண்டு இருந்ததோடு திருமண தரகர்களிடம் தனக்கு நல்ல ஒரு மணப்பெண்ணை பார்க்குமாறு சொல்லியிருக்கிறார்.

அப்போதுதான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமண தரகர் பாலமுருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தரகர் அமிர்தவல்லி ஆகியோர் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள்.

அவர்களும் தங்களுக்கு தெரிந்த பெண் ஒருவர் தேனியில் இருப்பதாகவும் பெற்றோர் இல்லாமல் தனியாக வசித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பிய விக்னேஷ்வரன், தேவி என்ற அந்தப் பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் மணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு, விருதுநகரில் தனது உறவினர் வசிப்பதாகவும் அவரது வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று விக்னேஷ்வரனிடம் தேவி கூறியிருக்கிறார். கல்யாணம் முடிந்த 3-வது நாள் விக்னேஷ்வரனும் தேவியை விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் விருந்துக்கு வெறுங்கையுடன் போக முடியாது, அதனால் போகும்போது, சித்தியின் பிள்ளைகளுக்கு துணி எடுக்க வேண்டும் என்று கூறி, துணி எடுக்க 8,500 ரூபாயை வாங்கி கொண்டு விக்னேஷ்வரனை வீட்டில் இருங்கள் என்று சொல்லிவிட்டு தேவியும் அவரது உறவுக்கார பெண்ணும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பவே இல்லை.

இருவரையும் காணாததால் பதறிப்போன விக்னேஷ்வரன் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். கடைசியாக கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில், நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்து இருக்கிறார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அப்போது , விக்னேஷ்வரனை திருமணம் செய்த பெண் தமிழகம் முழுவதும் இதுபோன்று திருமணங்கள் செய்து மாப்பிள்ளை வீட்டினரை ஏமாற்றியது தெரியவந்தது.

திருமணம் செய்து விட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதை வாடிக்கையாக இந்த பெண் வைத்திருந்தார்.

இதற்கு முன்பு திருச்சி, சேலம், கரூர், அவினாசிபாளையத்தை சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்தவர். அவர்களிடமும் இப்படித்தான், பணமோ, நகையோ எது கிடைத்தாலும் அபேஸ் செய்துகொண்டு கம்பி நீட்டிவிடுவாராம். இப்போது அந்த வரிசையில் விக்னேஸ்வரன் பாதிக்கப்பட்டு விடவும், காவல்துறையினர் பொன்தேவியை தேட ஆரம்பித்தனர்.

மதுரை உள்ளிட்ட பிற மாவட்ட காவல்நிலையங்களுக்கும் தகவல் தந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவரை இன்னொரு கல்யாணம் செய்துள்ளார் பொன்தேவி என்பது தெரியவந்தது.

அவருடன் ஓட்டலில்சாப்பிட்டுவிட்டு, அவரது கையை பிடித்தபடியே வெளியே நடந்துவந்தபோது, காவல்துறையினர் பொன்தேவியை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பிறகு கரூர் காவல்துறைக்கும், விக்னேஸ்வரனுக்கும் தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து, பொன்தேவியை கரூர் அழைத்து சென்றனர்.. விக்னேஸ்வரன் தந்த புகாரின்பேரில் பொன்தேவி கைதானார்.

இதையடுத்து, விக்னேஷ்வரனை ஏமாற்றிய தேவி மற்றும் திருமண தரகர்கள் பால முருகன், அமிர்தவல்லி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!