விளையாட்டு போட்டிகளை மேம்படுத்த காகித நிறுவனம் சார்பில் நிதி: அமைச்சரிடம் வழங்கப்பட்டது
ரூ.75 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியபோது
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ 75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
இந்த நிதி விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஊரக பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu