திமுக ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம்: அமைச்சா் உதயநிதி
கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் உதயநிதி
கரூா் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராயனூரில் லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ. 267.43 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வைத்தார். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், :
கடந்த 22 மாத திமுக ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் 7,071 ஏக்கா் நிலங்கள் 3,450 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.. நகரப் பேருந்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் 250 கோடி போ் பயணம செய்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் மட்டும் 31 கோடி போ் பயணித்துள்ளனா்.
மதிய உணவுத் திட்டத்தில் ஏற்கனவே ஒன்றரை லட்சம் குழந்தைகள் பயனடைந்து வரும் நிலையில் காலை சிற்றுண்டி திட்டத்தில் தற்போது 2 லட்சம் போ் பயன்பெற்று வருகின்றனா். இதைத்தவிர புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறோம்.
கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே முன்னோடியாக நம்மை காக்கும் 48 என்ற மகத்தான திட்டத்தையும் வழங்கி வருகிறோம். மாயனூா் ஆற்றின் குறுக்கே கருணாநிதி கதவணை கட்டியதுபோல, முதல்வரும் நெரூா், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் ரூ.1,450 கோடியில் கதவணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார். விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும்.
இதுவரை 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கை சீரமைக்கவும் புதிதாக டென்னிஸ் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ரூ. 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்
முன்னதாக அமைச்சா் செந்தில்பாலாஜி விழாவில் பேசுகையில், கரூா் அரசு வேளாண்மைக்கல்லூரி, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.40 கோடி வழங்கி தரம் உயா்த்தியது தரகம்பட்டி அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.14 கோடி போன்ற கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்திவருகிறார் என்று கூறினார்.
விழாவில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் முனைவா் அதுல்ய மிஸ்ரா, மகளிர் மேம்பாட்டு செயல் இயக்குநா் பிரியங்கா பங்கஜம் மற்றும் அரசு அலுவலா்கள், கரூா் மாநகராட்சி மண்டல குழு தலைவா்கள் கனகராஜ், கரூா் வடக்கு நகர பொறுப்பாளா் கரூா் கணேசன், தெற்கு நகர பொறுப்பாளா் சுப்ரமணியன், மேற்கு நகர பொறுப்பாளரும், மாநகராட்சி 2-ஆவது மண்டல குழு தலைவருமான கா. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்
தொடா்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பங்கேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu