கரூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது அழுத ஜோதிமணி

கரூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது அழுத ஜோதிமணி
X

பிரசாரத்தின் பொது தனது தாயை நினைத்து கண் கலங்கிய ஜோதிமணி 

ஜோதிமணி தனது சொந்த ஊரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, மறைந்த அவரது தாயை நினைத்து சில நிமிடங்கள் கண்கலங்கி அழுதார்

நாடு முழுவதும், ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், தீவிரமாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, மிகத்தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அஞ்சூர், தென்னிலை, கோடந்தூர், பெரிய திருமங்கலம், தென்னிலை கிழக்கு, ஆரியூர், நெடுங்கூர் கார்ரூடையாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ஜோதிமணியின், சொந்த ஊரான கூடலூர் மேற்கு ஊராட்சியில் உள்ள பெரிய திருமங்கலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது பேசிய அவர், மூன்று முறை கவுன்சிலராக மக்கள் பணி ஆற்றி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மக்கள் பணி செய்ய ஒரு வாய்ப்பு வழங்கினீர்கள் நான்கு ஆண்டுகள் 9 மாதங்கள் 24 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினேன் என்று கூறினார்

இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது தாய் குறித்த நினைவுகளைக் கூறும்பொழுது கண்கலங்கி அழுதார். அப்போது ஜோதிமணியை பார்த்து, அங்கிருந்த பெண்கள் அனைவரும், நாங்களாம் உங்களுக்கு அம்மா தான் அழாதிங்க என்று ஆறுதல் கூறினர்.

இதனைத் தொடர்ந்து க.பரமத்தி அருகே உள்ள காரூடையாம்பாளையம் பகுதியில் பேசிய ஜோதிமணி, எனக்கென அம்மா, அப்பா, குழந்தைகள் என்று குடும்பம் எதுவும் இல்லை. நான் தனியாகத்தான் உள்ளேன். எனக்கு நீங்கள்தான் குடும்பம் உங்களுக்காக பணியாற்றிட மீண்டும் வாய்ப்பு கொடுத்து, அனைவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு