தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம் என்ன?
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற கருத்திற்கு ஏற்ப கூட்டுறவு சங்கங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் என்பது மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படும் அரசு நிறுவனங்கள் ஆகும். மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவினால் தொடங்கப்பட்டது தான் கூட்டுறவு இயக்கம். இதன் காரணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான நவம்பர் மாதம் ௧௪ம் தேதி கூட்டுறவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் ஒரு வார காலம் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுவது உண்டு. தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பல முறை பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவித்து உள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் தென்னிலை தொடக்கக் கூட்டுறவு கூட்டுறவு கடன் சங்கம் பற்றி அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தென்னிலை தொடக்கக் கூட்டுறவு கூட்டுறவு கடன் சங்கம் 1960 வாக்கில்ஆரம்பிக்கப்பட்டதாகும். இச்சங்கம் கூட்டுறவு விவசாய வங்கியாக பதிவு செய்யப்பட்டு அன்று முதல் விவசாயிகள், ஏழை எளிய மக்களிடம் நிரந்தர வைப்பு, சேமிப்பு வைப்பு, தொடர் வைப்புக்கள் பெற்று வந்தது. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இச்சங்கத்தில் கடந்த 8 ஆண்டு காலமாக காலியாக உள்ள செயலாளர் பணியிடம் கூட்டுறவுத்துறையால் நிரப்பப்படாமல் அனுபவம் அற்ற பணியாளர்களையே பொறுப்பு செயலாளராக நியமித்து நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
போதிய அனுபவம், திறமை இல்லாத பணியாளர்களின் செயல்பாட்டால் நம்பிக்கை இழந்த பொதுமக்கள் இச்சங்கத்தில் டெபாசிட் செய்து இருந்த சுமார் ரூ. 10 கோடி அளவிலான வைப்புகளை தினசரி திரும்ப பெற்று வருகின்றனர். ஏறத்தாழ முழு தொகையும் திரும்ப பெறப்பட்டு வெவ்வேறு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதற்கு பணியாளர்களின் பொறுப்பற்ற செயல் பாடும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்குமே காரணம் என்று இந்த கடன் சங்கத்தில் வைப்பு நிதி வைத்திருந்து தற்போது திரும்ப பெற்றவர்கள் கூறி வருகிறார்கள்.
வணிக வங்கிக்கு இணையாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்புடன் தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு வந்த இச்சங்கம் விரைவில் நட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என பொதுமக்கள் கருதுகின்றனர்.
சங்கத்தின் வரவு செலவுகள் மற்றும் கடன் வழங்கியவற்றிலும், கடன் தள்ளுபடியிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அனுபவம் மிக்க ஒருவரை செயலாளராக நியமிக்க கோரியும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சிதலைவரிடம் முறையிடவும், அமைச்சரை சந்திக்கவும் தென்னிலை பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக கூட்டுவு துறையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu