புகழூரில் புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க வேண்டும்

புகழூரில் புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க வேண்டும்
X

கரூர் மாவட்டம் புகழூரில் நடைபெற்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம்.

புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் கரூர் மாவட்டம் புகழூரில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் டி.கே சுப்பிரமணியம் தலைமை வகித்தார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து, தமிழகத்தை பாலைவனமாக்க திட்டமிட்டு, சட்டவிரோதமாக ரூ. 1,000 கோடி (ஆயிரம் கோடி) ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை தமிழகம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும், கர்நாடகத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து மின்சாரம் மற்றும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த மின்சாரம் செல்கிறது.

கொதிப்பதை அடக்க எரிவதைப் பிடுங்க வேண்டும் என்ற அடிப்படையில், கர்நாடக அரசிற்கு பொருளாதாரத் தடையை தமிழ்நாடு அரசு உடனே விதிக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடக அரசின் அத்துமீறிய அடாவடி செயலுக்கு, தமிழகம் எதிர்வினையாற்ற வேண்டும். காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு விசஆலைக் கழிவுகள் வந்து கொண்டுள்ளன.

20,000 டிடிஎஸ் வரையிலான நச்சுகழிவு தண்ணீர், கரூர் மாவட்டம் புகழூரில் தற்போது 405 கோடி ரூபாய் செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணையில் தேங்கி நிற்கக்கூடிய அபாய நிலை உள்ளது. எனவே புகழூர் கதவணையில், ஆண்டு முழுக்க 20 ஆயிரம் டிடிஎஸ் வரை உப்பு மற்றும் விஷத்தன்மையுடன் வந்து கொண்டுள்ள நொய்யல் ஆற்று கழிவு தண்ணீர், புகலூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை, கதவணை கட்டி முடிக்கும் முன்பே செய்ய வேண்டும்.,

இதை மக்கள் மத்தியில் பரப்புரையாக கொண்டு சொல்ல, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் விரிவடைந்த ஒருங்கிணைப்பு குழுவை கூட்டி வேலைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு தளவாபாளையம் சுப்பிரமணி, ஆனந்த், கரூர்.ந.சண்முகம், தவுட்டுப்பாளையம் அக்பர், விஜயன், புளூர் விசுவநாதன், புகழூர் பழனியப்பன் அப்துல் ரகுமான், மதுமதி யுவராஜ், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனந்த் நன்றி கூறினார்

Tags

Next Story