குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்

குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்
X

தீயணைப்பு வீரரர்கள் குடியிருப்பு முன்பு சுகாதார சீர்கேட்டை. ஏற்படுத்தும் பொது கழிவறை.

வேலாயுதம்பாளையத்தில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு முன்பு உள்ள பொதுக்கழிவறையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

வேலாயுதம்பாளையம் காந்தி நகரில், தார்ரோட்டின் மேல் அப்பகுதி பொதுமக்களுக்காக பல வருடங்களுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது இக்கழிப்பிட கட்டடம் சிதலமடைந்த நிலையில் உள்ளது. மேல் பகுதியில் உள்ள தொட்டியில் இருந்து வழியும் தண்ணீர் சுவர்களின் வெடிப்பு வழியாக உள்பக்கம் கசிகிறது. இதனால் இக்கட்டடம் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்நிலையில் பொதுக்கழிப்பிடத்தின் செப்டிக் டேங் நிறைந்து வெளியேறும் கழிவுகள் அக்கட்டடத்தின் பின்புறம் உள்ள தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு வளாகத்தின் முன்பு தேங்குகிறது. இதனால் அங்கு வசிக்கும் தீயணைப்பு வீரர்கள் குடும்பத்தினர் ஜன்னலை திறந்தாலே துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் குடியிருக்கவே முடியவில்லை என்று புலம்புகின்றனர்.

மேலும் மழை வெள்ளம் வந்தால் இந்த கழிவுகளை அடித்து கொண்டுவந்து தாழ்வாக உள்ள தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் தேங்குகிறது. இதனால் அப்பகுதி எங்கும் கடும் துற்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் ரேசன்கடை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அங்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு அமர்ந்திருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் விரைவில் தீயணைப்பு நிலையம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுக்கழிப்பிடத்தை சுற்றிக்கொண்டு பின்புறமாக செல்லும் குறுகலான பாதையில் தீயணைப்பு வாகனம் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அரசு அலுவலகங்கள் முன்பு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அக்கழிப்பிடத்தை விட்டு சற்று தள்ளி பயன்படுத்தப்படாமல் உள்ள மற்றொரு பொதுக்கழிப்பிடத்தை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு