தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள புகளூரில் செயல்பட்டு வருகிறது. இந்த செய்தித்தாள் காகித ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், ஊதிய உயர்வு, போனஸ், ஆலைக்குள் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை ஆலை நிர்வாகத்திடமிருந்து பெற்று தருவதற்கு பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கங்களுக்கு இடையே 4 வருடத்திற்கு ஒரு முறை தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் நடைபெறும். தேர்தலில் 15 சதவீதம் வாக்குகள் பெறுகின்ற சங்கத்திடம் மட்டுமே ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை ஈடுபடுவார்கள்.

தொழிற்சங்களுக்கு இடையேயான தேர்தல் அக்டோபர் 23ம் தேதி நடக்க இருப்பதாக காகித ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தொழிற்சங்கங்களும் வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், திடீரென நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகம் அறிவித்தது.

இதனை கண்டித்தும், உடனடியாக அறிவித்த தேதியில் தேர்தல் நடத்திட ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காகித ஆலை வாயில் முன்பாக டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது‌.

இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு அங்கீகார தேர்தலை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!