பட்டா வழங்கும் விவகாரம்: போராட்டத்தை வாபஸ் பெற்ற பட்டியலின மக்கள்

பட்டா வழங்கும்  விவகாரம்: போராட்டத்தை வாபஸ் பெற்ற பட்டியலின மக்கள்
X

தற்காலிக டெண்ட்களில் வாழும் பட்டியலின மக்கள்.

கரூரில் பட்டா வழங்க வலியுறுத்தி இன்று நடத்த இருந்த காத்திருப்பு போராட்டம் அதிகாரிகள் சமாதானத்தால் ரத்து செய்யப்பட்டது.

மழைக்காலங்களில் அவதியுறும் பட்டியலின மக்களுக்கு, வீடு கட்ட இடம் ஒதுக்கீடு செய்தும், பட்டா வழங்காத காரணத்தால், கரூரில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த டொம்பன் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்காலிக டெண்ட் குடிசைகளில் வாழும் இவர்களுக்கு, வீடுகட்ட இடம் ஒதுக்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆட்சியில் டொம்பன் இனத்தைச் சேர்ந்த 93 குடும்பத்தி னருக்கும் அருந்ததியின மக்கள் 94 குடும்பத்தினருக்கும் குப்பம் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான பட்டா வழங்கப்படாத காரணத்தால், மக்கள் வீடு கட்டி அங்கு குடியேற முடியாமல் தவித்து வந்தனர். உரிய பட்டா வழங்க உறுதி வழங்க வலியுறுத்தி பலமுறை அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று பட்டியல் இன விடுதலை பேரவை சார்பில், வேட்டைமங்கலத்தில் உள்ள டொம்பன் மட்டும் அருந்ததியினர் இன மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த மக்களை சந்தித்து சமாதானப்படுத்தி, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் உரிய பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து பட்டியலின பேரவைத் தலைவர் ஆனந்த் கூறுகையில், அரசு அதிகாரிகளின் வாக்குறுதிப்படி காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வாக்குறுதிப்படி ஒரு மாத காலத்திற்குள் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு