கலைக் கூத்தாடிகளுக்கு கருணை காட்டிய அரசு

கலைக் கூத்தாடிகளுக்கு கருணை காட்டிய அரசு
X

கலைக் கூத்தாடிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி.

சாலையோரத்தில் டெண்ட் அமைத்து வாழ்ந்து வந்த கலைக் கூத்தாடி குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் வேட்டமங்கலம் அருகேயுள்ள குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, கிடைத்த கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வரும் கலைக்கூத்தாடிகள் என்று சொல்லப்படும் டொம்பர் இன மக்கள் 94 குடும்பங்கள் உள்ளன.

இவர்களுக்கு சொந்தமான இடமில்லாத காரணத்தால் சாலையோரத்தில் டெண்ட் அமைத்து வந்தனர். பல ஆண்டுகளாக தங்கள் வீடு கட்ட அரசு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். குந்தாணிப்பாளையத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 358 நபர்கள் வசிப்பதற்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கூடாரம் குடியிருந்து வருவது மாவட்ட நிர்வாகம் மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அண்மையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குப்பம் கிராமத்தில் வீட்டுமனை பட்டாக்களை கலைக்கூத்தாடி குடும்பத்தினருக்கு வழங்கினர். இதன் மூலம் முதல் கட்டமாக 50 ஆண்டுகால நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக மாவட்ட நிர்வாகம், தாட்கோ மூலம் கான்கிரீட் வீடுகள் . ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் , கழிப்பறை, சாலை வசதிகள் அமைத்து கொடுக்கவும் , மின்சார வாரியத்தின் மூலம் மின் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

வீட்டுமனைப் பட்டாவை பெற்று கொண்ட விஜயா கூறுகையில், கயிறு மேல் நடந்து கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை இப்படியே போய்விடும் என்று நினைத்து கொண்டிருந்தேன் . எனது வயது 45 ஆகிறது. இதுவரை ஒருநாள் கூட செங்கல் வைத்து கட்டிய வீட்டில் உறங்கியதில்லை. நாங்களும் மனிதர்களாக மதிக்கப்பட்டு எங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். வீட்டுமனைப் பட்டாவை பெற்று கொண்ட ரேவதி கூறுகையில், கூடாரம் அமைத்து மழை, வெயில் என்று பாராமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்து வந்தோம். எங்கள் வாழ்வு தான் இப்படி ஆகிவிட்டது . குழந்தைகள் வாழ்வாது நிரந்தரமாக இருக்காதா என்று ஏங்கி கொண்டிருந்த போது, அதிகாரிகள் வந்து கணக்கெடுத்தார்கள்.

திடீரென ஒரு நாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கையால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுத்தாங்க. சீக்கிரமே வீடும் கட்டித்தரப்போறோம்னு அதிகாரிங்க சொன்னாங்க. தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வார்தை இல்லை என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!