பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது   3 பிரிவுகளில் வழக்கு
X
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செந்தில் பாலாஜி குறித்து தவறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

'அடித்து பல்லை உடைப்பேன்' என்று பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் ௨தினங்களுக்கு முன்னர் அண்ணாமலை அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூமதேவம் என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செந்தில்பாலாஜி குறித்து பேசும்போது, செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு் மிதிச்சனா.. பல்லு வெளிய வந்துடும் என பேசினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நேற்று இரவு செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை தூக்கிபோட்டு மிதிப்பேன் என கொலை மிரட்டல் விடுத்தும், தனக்கு இன்னொரு முகமும் இருக்குது. அது கர்நாடக முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக கலவரத்தை தூண்டும் வகையில் தனிநபர் விமர்சனம் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ என்பவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதால் இந்த கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும் கர்நாடக மற்றும் வெளிமாநில குண்டர்களை அழைத்துச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாக அண்ணாமலையின் செயல் உள்ளது. எனவே, இவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்ற வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என செந்தில் பாலாஜி அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

காவல் துறை மட்டுமல்லாது கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கும் செந்தில் பாலாஜி புகார் மனுவை அனுப்பி உள்ளார். இதையடுத்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 153, 506 மற்றும் தகவல் பரிமாற்ற சட்டம் 65 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!