நூதன கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார்

கரூர் நகராட்சி வெங்கமேடு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி உலா வந்தார். மேலும் அவர் தன்னை கொரோனா நோயாளி என்று சொல்லியபடி, தனக்கு உதவுங்கள் என்று சாலையில் திரிந்த பொதுமக்களிடமும், வாகனங்களில் சென்றவர்களிடம், கூறினார்.
மேலும் அந்த வாலிபருக்கு பின்னால் போலீசார் கொரோனா நோயாளியை பிடியுங்கள், அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்துவிட்டார் என்று கூறியபடி துரத்தி வந்தனர். இதை கேட்ட பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
இதனால் வெங்கமேடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஓட்டம் பிடித்த பொதுமக்களை வெங்கமேடு காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார், இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றும், கொரோனா நோயாளி போன்று சித்தரிக்கப்பட்ட வாலிபரை கண்டு அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தனர். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், கரூர் நகர பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம்.
எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். கடை, மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிவதும் அவசியம். காலை 10 மணிக்கு மேல் சாலையில் நடமாட கூடாது என்றனர்.இதேபோல் வாங்கபாளையம் பகுதியிலும் போலீசார் இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu