மயானப் பாதை போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆட்சியர் நிதியுதவி

மயானப் பாதை போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆட்சியர் நிதியுதவி

மயான பாதை மீட்பு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

மயான பாதையை மீட்க நடந்த போராட்டத்தில் மயக்கமடைந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

கரூர் மாவட்டம், நெரூர் அருகேயுள்ள வேடிச்சிபாளையத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றித்தரக்கோரி நேற்று முன்தினம் இரவு பட்டியலின மக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மயானத்தில் குடியேறி போராட்டத்தை தொடங்கினர்.

தொடர்ந்து நேற்று காலையிலும் தொடர்ந்த போராட்டத்தில், ஈடுபட்டிருந்தவர்களில் வேலுச்சாமி என்பவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து வேடிச்சிபாளையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய தீர்வு எட்டப்படும் என்று அறிவுறுத்தலின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். உடனடியாக மயானத்துக்கு செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்தை இன்று நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், வேலுச்சாமியின் மனைவி மணிமேகலையிடம், ஈமச்சடங்கு நிதி உதவி ரூ .22,500, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ் ஒரு லட்சம் ரூபாய், விதவை உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்குவதற்கான உத்தரவையும் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறும் வகையில் ஆதரவற்றோர் விதவை சான்றிதழையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story