வல்வில் ஓரி படத்துக்கு அவமரியாதை கண்டித்து சாலை மறியல்

கரூரில் மாமன்னர் வல்வில் ஓரி படம் அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல்
கரூரில் வல்வில் ஓரியின் திருவுருவப்படத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாமன்னர் வல்வில் ஓரியின் நினைவை போற்றும் வகையில், ஒவ்வொறு ஆண்டும் ஆடி 18 அன்று அரசு விழாவாக கொல்லிமலையில் கொண்டாடப்படும். நிகழாண்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வல்வில் ஓரியின் ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை.
ஆனால், நேற்று கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், வல்வில் ஓரியின் திருவுருவப் படத்தை வைத்து வேட்டுவக் கவுண்டர்கள் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், நேற்றிரவு புன்னம் சத்திரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வல்வில் ஓரியின் படத்தை சிலர் அடித்து சேதப்படுத்தி அவமரியாதை செய்தனர். இது குறித்து அறிந்த வேட்டுவ கவுண்டர்கள் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர், புன்னம் சத்திரம் பகுதியில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு கரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமையில், பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் சாலை மறியலில். ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, இரண்டு தினங்களுக்குள் வல்வில் ஓரியின் படத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu