கரூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
Karur News Today: கரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புற சூழல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை பின்பற்றி ஊராட்சி பகுதிகளில் தூய்மையான நிலையை அடைவதற்கும், எழில்மிகு நிலையை நிலை நிறுத்துவதற்கும், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரம் உயர்வதற்கு ஊராட்சிகளை திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்ற, தக்கவைக்க கரூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சி பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வீடுகளிலும் தூய்மை காவலர்கள் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குப்பைகள் சேகரிக்க வீடுகளுக்கு வரும்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை திறந்த வெளியில் வீதிகளில் கொட்டாமல் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குப்பைகளை சேகரிக்க வரும் துய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும்.
குப்பையை வாங்க வரவுள்ள துய்மை காவலர்கள் குறித்த விவரம், வீடுகளில் வாங்கும் நேரம் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையா என்பது குறித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். குப்பையை வாங்க வரும் துய்மை காவலர் விவரம், மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் விவரம் பேனராக ஊராட்சியில் நிறுவப்படும்.
திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்கள் மீது சுகாதார சட்டம் மற்றும் ஊராட்சிகள் சட்ட பிரிவுகளின்படி அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேகரிக்கப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை (உரக்குழி) உரிய இடத்தில் வழங்க வேண்டும். குப்பைகளை எரிக்கவோ, மலைபோல் குவித்து வைப்பதோ கூடாது. எந்தவொரு காரணத்தை கொண்டும் தூய்மை காவலர் குப்பை சேகரம் செய்யும் பணி தடைபடாத வகையில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பின் அதனை ஊராட்சி அலுவலகத்தில் வழங்கி கிலோவிற்கு ரூ. 10 பெற்றுக்கொள்ளலாம். சுகாதாரமான பசுமை நிறைந்த கிராமங்களை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu