அண்ணா சாலையில் கலைஞர் சிலை நிச்சயமாக வைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவச் சிலையை அண்ணா சாலையில் அமைப்பது குறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் சட்டபேரவையில் கோரிக்கை வைத்து பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணா சாலையில் கலைஞர் சிலை நிச்சயமாக வைக்கப்படும் என்று உறுதியளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் அவர் பேசியதாவது:
இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் அவர்கள் தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
தந்தை பெரியார் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை அண்ணா சாலையிலே தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்காக முறையாக அனுமதியும் பெற்று அந்தச் சிலை வைக்கப்பட்டது. ஆனால் அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் நான் அந்த விஷயத்திற்குள்ளே சென்று, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புகூட, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி என்னைச் சந்தித்து, அவரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் எடுத்து வைத்திருக்கிறார். இது பெரியார் நினைத்தது பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு நாங்கள் அதை வைத்தது. எனவே, மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டுமென்று அவரும் என்னிடத்திலே வற்புறுத்தியிருக்கிறார்.
நான் அப்போது சொன்னேன் பொதுவான இடங்களிலே, போக்குவரத்திற்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கப்படக்கூடாது என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரிடம் அந்தச் சட்டச் சிக்கல்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
'நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான் எனவே புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சொன்னார். எனவே அதை வைக்க வேண்டுமென்று கி.வீரமணி அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல அண்ணா சாலையிலே தந்தை பெரியார் சிலை இருக்கிறது அதேபோல, பேரறிஞர் அண்ணா சிலை இருக்கிறது மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களுடைய சிலை இருக்கிறது. ஏற்கெனவே, கலைஞர் அவர்களுடைய சிலையும் இருந்தது. எனவே அந்த இடத்திலே நீங்கள் அதை வைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். அண்ணா சாலையில் அதை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற உத்தரவிற்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சயமாகக் கலைஞர் அவர்களுடைய சிலை அண்ணா சாலையிலே வைக்கப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் மேசையைத் தட்டியும், கைதட்டியும் ஒலி எழுப்பினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu