கருணாநிதி நூற்றாண்டு விநாடி-வினா போட்டி: கனிமொழி எம்.பி. ஏற்பாடு

கருணாநிதி நூற்றாண்டு விநாடி-வினா போட்டி: கனிமொழி எம்.பி. ஏற்பாடு
X

(மாதிரி படம்)

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் 100 என்ற தலைப்பில் விநாடி வினா போட்டியை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில்‌ கலைஞர் 100 என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் கலைஞர் 100 வினாடி வினா, இணையவழி மற்றும் நேர்முகப் போட்டிகள் வழியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

போட்டிகள் செப்டம்பர் 15 ஆம்தேதி தொடங்கி, தொடர்ந்து 75 நாட்கள் (இணையத்தில் 45 நாட்கள் மற்றும் நேரடியாக 30 நாட்கள்) நடைபெற இருக்கிறது. வயது வரம்பில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு 18 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நடைபெறும். இந்த நிகழ்ச்சியை முறைப்படி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார். இன்று முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை அனைவரும் கலைஞர் விநா விடைக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளக் கொடுக்கப்பட்ட அவகாசமாகக் கூறப்படுகிறது.

கலைஞர் 100 விநாடி வினா நிகழ்ச்சியை காணொலியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதியின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தை, தமிழ்நாடு என்னும் பெருநிலத்தை, தமிழின வரலாற்றை அனைவரும் அறிந்திடும் வண்ணம் திமுக துணைப் பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி. மற்றும் திமுக மகளிர் அணியின் முன்னெடுப்பில் ‘கலைஞர் 100 - வினாடி வினா’ போட்டி நடைபெற இருக்கிறது.

நமது முந்தைய களப் போராட்டங்களை, நாம் மேற்கொண்ட அரசியல் புரட்சியை, அதற்கு வித்திட்ட நம் முன்னோடிகளை, நாம் அனைவரும் திரும்பிப் பார்க்கவும், நம் அடுத்த தலைமுறையிடம் எடுத்துக்கூறவும், இந்த வினாடி-வினா போட்டி பெரும் திறப்பாக அமையும். பத்தாயிரம் கேள்விகளோடு, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த விநாடி வினா போட்டியில், எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம்.

kalaignar100.co.in என்ற இணையத்தளத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இணையவழிப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை, கருணாநிதியின் நூற்றாண்டில் கொண்டாடுவோம் என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை